ஆசிரியர் இனம்!!!

ஆசிரியர் இனத்தைப்பற்றி ஒரு மருத்துவரின் உருக்கமான பதிவு..

*ஆசான் பகிர்வு....*
சமீபத்தில் ஒரு அரசு பள்ளி  ஆசிரியை என்னை சந்திக்க வந்திருந்தார்.* 

*தலை சுற்றல் தான் பிரதான அறிகுறி!* 

காலையில் உணவு தாமதமானதால் ரத்த சர்க்கரை அளவுகள் குறைந்து அதனால் சர்க்கரை குறைந்திருக்கும் என்று அனுமானித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவர் பணிமூப்படைவதற்கு (Retirement) இன்னும் சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் மட்டுமே இருக்கின்றன போலும்.. 

நான் சில ரத்த பரிசோதனைகள் எழுதிக்கொடுத்து நாளை பரிசோதனை செய்து விட்டு மீண்டும் சந்திப்போம் என்று கூற, அவர் 

"சார் நாளைக்கு என்னால டெஸ்ட் எடுக்க முடியாது. பசங்களுக்கு பரீட்சை இருக்கு. நான் இல்லனா ஒழுங்கா எழுதமாட்டானுங்க"

" உங்களுக்கு எத்தனை பசங்க மா..?"

"ஐம்பத்தி ஏழு பசங்க சார்"

"என்ன சொல்றீங்க?" 

"நான் டெண்த்க்கு  அறிவியல் எடுக்கிறேன் சார். என் க்ளாஸ் பசங்கள தான் சொன்னேன்" 

*பின் முதுகுத்தண்டில் இருந்து ஒரு அனிச்சை உணர்ச்சி நரம்புகளில் விருட்டென பாய மயிர்கள் கூச்செரிவதை இதை எழுதும் போது கூட உணர்கிறேன்.* 

"டீச்சர்... சனிக்கிழமை ரத்த டெஸ்ட் எடுங்களேன். உங்க உடம்பும் முக்கியம் தானங்கம்மா.." 

"ஆமா சார்.. அதை விட என்னை நம்பி இருக்குற என் பிள்ளைங்க படிப்பு முக்கியமாச்சே"

இப்போது தொண்டையில் இருந்து ஒரு அழுத்த உணர்ச்சி நெஞ்சுக்கூட்டை அழுத்தி பிழிய கண்கள் குளமாவதை அவரிடம் காட்டாமல் மறைக்க நான் தான் சிரமப்பட்டேன். 

இப்போது அவரது கணவர் 

"சார்.. இவ உடம்ப பாத்துக்க மாட்டேங்குறா.. வயசு ஆகுது.. கேட்க மாட்டேங்குறா" என்றார் 

இப்போது டீச்சர் அம்மா.. 

" சார்.. நான் ரிடையர் ஆகப்போறேன்னு அடுத்த ரெண்டு வருசத்துக்கு என்ன  ஆறாம் க்ளாசுக்கு போகச்சொன்னாங்க. அங்க போனா ஜாலியா இருக்கலாம். ஆனா நான் தான் இன்னும் ரெண்டு வருசம் தான் சர்வீஸ் இருக்கு. எனக்கு டெண்த் க்ளாஸ் போடுங்கனு கேட்டு வாங்கினேன்.. ரெண்டு வருசம் கழிச்சு சந்தோசமாக  ரிடயர்மெண்ட் ஆகுவேன்ல . இப்ப இருக்குற வேலை அதிகம் தான். ஆனா 
பாவம் சார் பிள்ளைங்க.. "  என்றார் 

இப்போது என்னால் அடக்க முடியவில்லை. 
கசிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல்
நீங்க சனிக்கிழமை டெஸ்ட் எடுத்துட்டு வாங்கனு அனுப்பிவிட்டேன்.. 

ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு சமுதாயம் இல்லை. 

அரசு ஆசிரியர்களையும் சரி .. தனியார் ஆசிரியர்களையும் சரி. எந்த வகையிலும் சிந்திக்காமல் நிந்திக்கும் பழக்கம் நம்மிடையே அதிகம் இருக்கிறது. 

அது தவறு.. 
அவர்கள் செய்யும் தியாகத்திற்கு முன் எதுவும் ஈடாகாது. 

நிச்சயம் ஆசிரியர்கள் 
போற்றுதலுக்கும்
நன்றிக்கும் உரியவர்கள் 

எத்தனையோ பேர் அதன் மீது ஏறிப்போனாலும் 

ஏணி இன்னும் அங்கேயே தான் இருக்கிறது 

எத்தனையோ பேர் அதனைக்கொண்டு கடந்து போனாலும் 

தோணி இன்னும் அங்கேயே தான் இருக்கிறது

நம் வாழ்க்கையில் நாம் அனைவருமே 
பல ஆசிரியர்களைக் கடந்து வந்திருப்போம். 

உலகிலேயே கடினமான பணி என்பது 
அன்பு கலந்த கண்டிப்புடன் ஒழுக்கத்தையும் அறிவையும் எத்திவைப்பது

ஆசிரியர்கள் அத்தகைய கடினமான பணியை தினந்தோறும் செய்து வருகிறார்கள். 

சாக் பீஸ் தூள் நுகர்தல் மூலம் ஆஸ்துமா

கையைத் தூக்கி எழுதுவதாலும்
திருத்திக் கொண்டே இருப்பதாலும் 
கழுத்து எலும்புத் தேய்மானம்
நின்று கொண்டே இருப்பதால் மூட்டு தேய்மானம்

கத்திக் கத்தி பாடம் எடுக்க வேண்டியிருப்பதால் குரல் நாண் அழற்சி 

பள்ளிகளைச் சரியான நேரத்தில் அடைவதற்கு நெடுந்தூரப் பேருந்து / இருசக்கர வாகனப் பயணங்கள்  

இன்னும் பல ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் நலனில் காட்டும் அக்கறையை தங்களின் நலனில் காட்டாமல் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் 

என இன்னும் பல அன்றாட பிரச்சனைகளுடன் ஆசிரியர்கள் என்னை சந்திக்கிறார்கள். 

*"இனிய ஆசிரியர்களே உங்களையும் உங்களது உடல் மன நலனையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டுமாய் இந்தப் பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்".* 

*ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியும், அன்பும் உரித்தாகுக!*

Dr.அ.ப. ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Comments

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES